Monday, February 23, 2009

தமிழீழ வழிபாடு - மகாசிவராத்திரி

தமிழீழ வழிபாடு - மகாசிவராத்திரி


திருச்சிற்றம்பலம்

விநாயகர் வணக்கம்

ஐந்து கரத்தனை ஆனை முகத்தனை
இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை
நந்தி மகன் தனை ஞானக் கொழுந்தினை
புந்தியில் வைத்தடி போற்றுகின்றேனே.

முருகன் வணக்கம்

ஆறுமுகம் வாழி ஆறிரண்டு தோள் வாழி
தேறுபதம் வாழி இரு தேவிமார் வீறு புடை வாழி
வேல் வாழி மயில் வாழி போரூரர் வாழி
செகம் வாழி மகிழ்ந்து!

அம்மை வணக்கம்

நாயகி நான்முகி நாராயணி கைநளின பஞ்ச
சாயகி சாம்பவி சங்கரி சாமளை சாதிநச்சு
வாயகி மாலினி வாராகி சூலினி மாதங்கி என்று
ஆயகி ஆதி உடையாள் சரணம் அரண் நமக்கே!

நால்வர் போற்றி

பூழியர் கோன் வெப்பொழித்த புகலியர்
...கோன் கழல் போற்றி!
ஆழிமிசைக் கன்மிதப்பில்
...அணைந்தபிரான் அடி போற்றி!
வாழி திருநாவலூர் வன்தொண்டர்
...பதம் போற்றி
ஊழி மலி திருவாதவூரர் தம்
...திருத்தாள் போற்றி!

சிவ வழிபாடு!

சடையானே தழலாடீ தயங்கு மூவிலைச் சூலப்
படையானே பரஞ்சோதீ பசுபதீ மழவெள்ளை
விடையானே விரிபொழில் சூழ்
..பெருந்துறையாய் அடியேன் நான்
உடையானே உனையல்லாதுறு
..துணை மற்றிலேனே!

போற்றி ஓ(ம்) நமசிவாய புயங்கனே மயங்குகின்றேன்!
போற்றி ஓ(ம்) நமசிவாய புகலிடம் பிறிதொன்றும் இல்லை!
போற்றி ஓ(ம்) நமசிவாய புறம் எனை போக்கல் கண்டாய்!
போற்றி ஓ(ம்) நமசிவாய செய செய போற்றி போற்றி!

தாயும் நீயே தந்தை நீயே சங்கரனே அடியேன்
ஆயு நின்பால் அன்புசெய்வான் ஆதரிக்கின்றதுள்ளம்
ஆய மாய காயந் தன்னுள் ஐவர் நின்று ஒன்றல் ஒட்டார்
மாயமே என்று அஞ்சுகின்றேன் வலிவலம் மேயவனே!

ஈழ நிலை சொல்லி வேண்டல்!

திருமுறைத் தலைவா திருமுறை தொழுதத்
...திருத்தமிழ்க் குமுகம் திகைத்தது கண்டீர்!
பெருந்துறைப் பெரியாய் பெருவினை திரண்டு
...பொருதிடக் குடியும் புலம்புதல் கண்டீர்!
குருதியும் புனலாய் தரணியில் அலைய
...குறுகுது குலமும் குழைகிறம் நித்தல்!
திருநடம் புரிவோய் திருவிழி திறந்தெம்
...தமிழ்நிலம் எழுக! அடைக்கலம் நின்தாள்!

அடைக்கலம் நின்தாள் அடைக்கலம் அடைக்கலம்
...ஆலவாய் அரசே அடைக்கலம் அடைக்கலம்
கடைநிலம் நின்றே கலங்கினம் வழியிலை
...கோடிய சிங்களர் செயுங்கொலை கணக்கிலை
கொடைபல தந்தே மலைமலை கொலைசெய
...காதகர் திரண்டு களிப்பதென் தெரியிலை
படைக்கலன் எந்தாய் நினதருள் பிறிதிலை
...அடைக்கலம் அடைக்கலம் படைக்கலன் உடனளி!

உமையொடு உனையே தொழுத எம்கரங்கள்
துவண்டின்றுத் தோற்றிடலாமோ?

அமைவுற்றப் புவியை அழிக்கும் எம்பகைவர்
அடுத்தவர் கூடி ஆண்டிடலாமோ?

இமைக்கவும் இயலா வெறித்த எம்விழிகள்
இனமுழு இழவைக் காண்டிடலாமோ?

எமைப்பெற்ற இறைவா எமக்கிந்த துயரெனின்
துடைப்பதும் உனது தொழிலல்லவோ?

ஈழமே எமதுயிர் எழுந்தெமக்(கு) அருள்வாய்!
ஈழமே எமதுயிர் எந்தீவினைவேர் அறுப்பாய்!
ஈழமே எமதுயிர் எம்சாவினைத் தடுப்பாய்!
ஈழமே எமதுயிர் எம்உறவினைக் காப்பாய்!
ஈழமே எமதுயிர் பெரும்பகைக் களைவாய்!

ஈழமே எமதுயிர் தனித்தெமக்(கு) அளிப்பாய்!
ஈழமே எமதுயிர் இனிதெமக்(கு) அளிப்பாய்!
ஈழமே எமதுயிர் மகிழ்ந்தெமக்(கு) அளிப்பாய்!
ஈழமே எமதுயிர் விரைந்தெமக்(கு) அளிப்பாய்!


=============================================

இறைவனை உருகிப் போற்றுதல்!

யாரொடு நோகேன்
யார்க்கெடுத்து உரைக்கேன்
ஆண்ட நீயிலை ஆனால்?

யாரொடு நோகேன்
யார்க்கெடுத்து உரைக்கேன்
பாரொடு விண்ணாய்ப் பரந்தபரனே!

யாரொடு நோகேன்
யார்க்கெடுத்து உரைக்கேன்
பற்று மற்றிலேன் கண்டாய்!

யாரொடு நோகேன்
யார்க்கெடுத்து உரைக்கேன்
சீரொடு பொலிவாய் சிவபுரத்தரசே!

பாற்கடல் கடையப் படுங்கடு வெண்ணெயைத்
...திருமிடற்றடிக்கிய சிவனே அடைக்கலம்!
அடங்கலும் அடக்கிடுங் கடுங்கோலைக் காலனைக்
...காலெடுத் தடக்கிய கடவுள் நின் அடைக்கலம்!
உலகடங்கலும் படைத்து உடையவன் தலைபறித்து
...இடக்கையில் அடக்கிய இறைவ நின் அடைக்கலம்!
செய்ய பொன்னம்பலச் செல்வ நின் அடைக்கலம்
...ஐய நின் அடைக்கலம்! அடிய நின் அடைக்கலம்!

(அடைக்கலம் நின் அடைக்கலம்)


ஆனைத்தோல் போர்த்துப் புலியின் உரியுடுத்துக்
கானத்து எருமைக் கருந்தலைமேல் நின்றாயால்
வானோர் வணங்க மறைமேல் மறையாகி
ஞானக் கொழுந்தாய் நடுக்கின்றியே நிற்பாய்!


வாழி ஆதன்! வாழி அவினி!
வேந்து பகை தணிக! யாண்டு பல நந்துக!

வாழி ஆதன்! வாழி அவினி
பகைவர் புல்லார்க! பார்ப்பார் ஓதுக !

வாழி ஆதன்! வாழி அவினி
பசி இல் ஆகுக! பிணி சேண் நீங்குக!

வாழி ஆதன்! வாழி அவினி
நன்று நனி சிறக்க! தீதுஇல் ஆகுக!

=======

ஐயா போற்றி அணுவே போற்றி
சைவா போற்றி தலைவா போற்றி

தென்னா டுடைய சிவனே போற்றி
எந்நாட் டவர்க்கும் இறைவா போற்றி

அருளிட வேண்டும் அம்மான் போற்றி
இருள்கெட அருளும் இறைவா போற்றி

தளர்ந்தேன் அடியேன் தமியேன் போற்றி
களங்கொளக் கருத அருளாய் போற்றி

அஞ்சே லென்றிங் கருளாய் போற்றி
நஞ்சே அமுதா நயந்தாய் போற்றி

அத்தா போற்றி ஐயா போற்றி
நித்தா போற்றி நிமலா போற்றி
பத்தா போற்றி பவனே போற்றி

கழுநீர் மாலைக் கடவுள் போற்றி
தொழுவார் மையல் துணிப்பாய் போற்றி

பிழைப்பு வாய்ப்பொன் றறியா நாயேன்
குழைத்தசொன் மாலை கொண்டருள் போற்றி

புரம்பல எரித்த புராண போற்றி
பரம்பரஞ் சோதிப் பரனே போற்றி
போற்றி போற்றி புயங்கப் பெருமான்
போற்றிபோற்றி புராண காரண
போற்றி போற்றி சயசய போற்றி!!!

திருச்சிற்றம்பலம்


( திருமந்திரம், தேவாரம், திருவாசகம்,
அபிராமி அந்தாதி, பட்டினத்தார் பாட்டு,
சிலப்பதிகாரம், ஐங்குறுநூறு,
நால்வர் மணிமாலை மற்றும்
தமிழர் ஒருவரின் பாடல்வரிகளோடு,
தமிழ் வழிபாடு)


ஒரு சில பொருள் மட்டும் இங்கே:

ஆதன் = தமிழ் மக்களைக் காக்கும் தலைவன்
அவினி = அவனை வாழ்த்தித் துணை நிற்கும் சான்றோர்

வாழி ஆதன்! வாழி அவினி!
வேந்து பகை தணிக! யாண்டு பல நந்துக!"

( தலைவனைச் சூழும் பகை நீங்குக! அவன்வாழும் யாண்டுகள் பல வளர்க)

"வாழி ஆதன்! வாழி அவினி"
பகைவர் புல்லார்க! பார்ப்பார் ஓதுக

(பகைவர் புல் அருந்துக! சான்றோர் பாராட்டுக)

"வாழி ஆதன்! வாழி அவினி"
பசி இல் ஆகுக! பிணி சேண் நீங்குக!

(ஈழத்து மக்களை வாட்டும் பசி இல்லை ஆகுக!
அவர்களிடமிருந்து நோய்கள் தொலைவுக்கு நீங்குக.
அந்தப் பிணிகள் போய் தமிழரை வருத்தும்
சிங்களவெறியரை அடைக ))

"வாழி ஆதன்! வாழி அவினி"
நன்று நனி சிறக்க! தீதுஇல் ஆகுக!

(நன்மை மிகவும் பெருகுக! தீமை இல்லை ஆகுக)

2 comments:

  1. //உமையொடு உனையே தொழுத எம்கரங்கள்
    துவண்டின்றுத் தோற்றிடலாமோ?

    அமைவுற்றப் புவியை அழிக்கும் எம்பகைவர்
    அடுத்தவர் கூடி ஆண்டிடலாமோ?//

    பஞ்சமும் நோயும் நின் மெய்யடியார்க்கோ?
    பாரினில் மேன்மைகள் வேறினி யார்க்கோ?
    என்ற பாரதியின் வேண்டல் போலவே, மனம் கசிந்து உள்ளது!

    ஈழத்தில் நிம்மதி காண அடியேன் வேண்டுதல்கள்!

    சம்பந்தப் பெருமான் ஈழத்தின் மேல் பாடிய பதிகம்:
    புத்தராய்ச் சில புனை துகில் உடையவர் புறன் உரைச் சமண் ஆதர்
    எத்தராகி நின்று உண்பவர் இயம்பிய ஏழைமை கேளேன் மின்
    மத்த யானையை மறுகிட வுரி செய்து போர்த்தவர் மாதோட்டத்
    தத்தர் மன்னு பாலாவியின் கரையிற் கேதீச்சரம் அடைமின்னே!

    மேலும் ஈழப் பதிகங்கள்:
    http://sivanpaattu.blogspot.com/2008/10/blog-post.html

    ReplyDelete
  2. அருமையான முயற்சி. வாழ்த்துகள்.

    இளங்குமரன்.

    ReplyDelete